×

நெல்லை அருகே ஆற்றில் கண்டெடுத்த தங்க மோதிரம் ஒப்படைப்பு ஏட்டுக்கு பாராட்டு

நெல்லை, டிச. 28: தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்தவர் அமலன். இவர் அங்குள்ள நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 25ம் தேதி குடும்பத்துடன் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது அவரது மகன் கையிலிருந்து ஒரு பவுன் தங்க மோதிரம் தவறி நீரில் விழுந்தது. இதனையறிந்த அவரது குடும்பத்தினர் ஆற்று நீரில்் சிறிது நேரம் தங்க மோதிரத்தை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில் அமலன் புகார் செய்தார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி நெல்லை மாநகர ஆயுதப்படை போலீஸ் ஏட்டு முத்துக்கிருஷ்ணன் முறப்பாடு தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்.

அவர் காலில் ஒரு பொருள் தட்டுப்பட்டது. இதனால் அவர் நீரில் மூழ்கி சுமார் ஒரு பவுன் தங்க மோதிரத்தை கண்டெடுத்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.35 ஆயிரம் ஆகும். இதனையடுத்து நேர்மையான மனதை கொண்ட போலீஸ் ஏட்டு முத்துக்கிருஷ்ணன் தங்க மோதிரத்தை முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எஸ்ஐ வினோத்குமாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார், அமலனுக்கு தகவல் தெரிவித்து தங்க மோதிரம் வாங்கி ரசீது மற்றும் அதற்குண்டான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து முறப்பநாடு காவல் நிலையத்திற்கு வந்த அமலன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆவணங்களை ஒப்படைத்து தங்க மோதிரத்தை பெற்றனர். மேலும் நேர்மையாக தங்க மோதிரத்தை ஒப்படைத்த போலீஸ் ஏட்டு முத்துகிருஷ்ணனை போலீஸ் அதிகாரிகள், அமலன் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Nellai ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!