நாகர்கோவிலில் மது போதையில் கால்வாயில் மூழ்கி கொத்தனார் பலி

நாகர்கோவில், டிச. 28 :  நாகர்கோவில் அருகே உள்ள களியங்காடு பனவிளை பகுதியை சேர்ந்தவர் பழனி (49). கொத்தனார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன் தினம் மாலையில் பார்வதிபுரம் சானலுக்கு குளிக்க சென்றார். மொத்தம் 5 பேர் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கால்வாய் தடுப்பு சுவரில் ஏறி நின்று தண்ணீருக்குள் பாய்ந்து ஜாலியாக குளித்தனர்.  இதில் திடீரென பழனி தண்ணீருக்குள் விழுந்ததில், தலையின் பின்புறம் அடிபட்டு தண்ணீரில் மூழ்கினார். போதையில் இருந்த மற்ற நண்பர்கள் இதை கவனிக்க வில்லை.

நீண்ட நேரத்துக்கு பின் நண்பர்கள் கரை ஏறி, வீட்டுக்கு புறப்பட்டனர். ஆனால் பழனி மட்டும் கரை ஏறி வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தேடினர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினரும் வந்து சானலில் இறங்கி தேடினர். அப்போது இவர்கள் குளித்து கொண்டிருந்த இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் தள்ளி பழனி, சடலமாக கிடந்தார். அவரது சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இது பற்றி வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பழனி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. பாறையில் உரசி காயம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுடன் ஜாலியாக குளித்து கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: