×

சிவகாசி அருகே மீண்டும் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சீல்

சிவகாசி, டிச. 28: சிவகாசி அருகே, செங்கமலநாச்சியார்புரத்தில் தனியாருக்கு சொந்தமான 3 பிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவுப்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகர்

மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் பிளாஸ்டிக் தொழிற்சாலையை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் பின்வாசல் வழியாக கதவைத் திறந்து மீண்டும் தடை செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில், சிவகாசி தாசில்தார் ராஜகுமார் உத்தரவுப்படி, திருத்தங்கல் விஏஓ காளியப்பன் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியம் ஆகியோர் தொழிற்சாலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தொழிற்சாலை அனுமதியின்றி இயங்கியது தெரிய வந்தது. மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், வருவாய் துறை மற்றும் காவல்துறை முன்னிலையில் தொழிற்சாலையின் கதவுகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தொழிற்சாலையின் உரிமையாளர் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து