தஞ்சை-திருச்சி இடையே மின்சார பயணிகள் ரயில் இயக்க வேண்டும்

தஞ்சை, டிச.28: தஞ்சை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கான வசதிகள் குறித்த ஆய்வுக்குழு தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவினர் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் இடம், பயணிகளுக்கான முதலுதவி மருத்துவ மையம், நகரும் படிக்கட்டுகள், பிளாட்பார பயணிகளின் இருக்கைகள், நிழற்குடைகள், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், குடிநீர், கழிவறை வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குழு தலைவர் கிருஷ்ணதாஸிடம், தஞ்சாவூர்-திருச்சி ரயில் பயணிகள் சங்க சட்ட ஆலோசகர் ஜீவக்குமார் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தளர்வுக்கு பின் பல பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரயிலை காலை நேரத்தில் இயக்க வேண்டும். இந்த ரயில் இயக்கப்பட்டால் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், அலுவலக பணிகளுக்கு செல்வோர், பொதுமக்கள் பயன் அடைவர். அதே போல் சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டும், வாகனங்களின் பயன்பாட்டால் காற்று மாசுபடுவதும் அதிகரித்து வருவதால், தஞ்சாவூர் - திருச்சி இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்சார பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் சீசன் டிக்கெட்டை அனுமதிக்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து பயணிகள் மற்றும் விரைவு ரயில்களை மீண்டும் இயக்கவதோடு, அந்த ரயில்கள் ஏற்கெனவே நிறுத்தப்பட்ட இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆய்வுக்குழுவினர் ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தனர்.

Related Stories: