அரியலூர்,டிச.28: அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம், நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் தலைமை வகித்தார், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களிடம் உறுப்பினர் படிவம் வழங்கி நகர்புற தேர்தல் பணிகள் குறித்து பேசியதாவது: திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையானது வருகின்ற மார்ச் 1ம் தேதிக்குள் ஒவ்வொரு நிர்வாகியும் தமக்குட்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் முப்பது சதவிகிதம் நபர்களை கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்பதற்கான இலக்கை நிர்ணயத்து செயல்படவேண்டும்.
மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும்போது மகளிர், இளைஞர்கள், மாணவ, மாணவியர்களை அதிக அளவில் சேர்த்திடல் வேண்டும். பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் அவரவர்களுக்கு வரையறைக்குட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பணிக்குழுக்களை வார்டு வாரியாக அமைத்து செயல் படுத்திட வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இணையவழியில் இணைந்தவர்களையும் சேர்த்து உறுப்பினர் அட்டை வழங்கிட வேண்டும், உறுப்பினர் படிவத்தில் உறுப்பினராக சேர்பவரின் கையொப்பம் கட்டாயம் பெறப்பட்டிருக்க வேண்டும், அவருடைய சார்பில் மற்ற யாரும் கையொப்பமிடக்கூடாது. எதிர் வருகின்ற நகர்புற ஊராட்சி தேர்தலில் திமுக ஆட்சியின் சாதனைகளையும், திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு கொண்டுவரும் புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துகூறி அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சி, இரண்டு பேரூராட்சிகளையும் நாம் கைப்பற்ற வேண்டும் அதற்காக அயராது உழைத்து வெற்றிபெற்றிட வேண்டும். அவ்வாறு அவர் கூறினார்.