திருப்பூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருப்பூர், டிச. 28: திருப்பூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தினசரி மார்க்கெட், பூ மார்க்கெட் டவுன்ஹாலில் கூட்ட அரங்கு மற்றும் பல்வேறு இடங்களில் கான்கிரீட் சாலை என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் ஆகியோரும் உடன் சென்றனர்.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தை புதுப்பொலிவுடன் ‘ஸ்மார்ட் சிட்டி’  திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் வகையில் நடைபெற்று வரும் பணிகள், அடுக்குமாடி வாகன நிறுத்தம் மற்றும் கூட்ட அரங்கம் ஆகிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இத்திட்ட பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி கட்டிட பணிகளையும், சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் திறந்தவெளி மைதானம் மற்றும் நீச்சல் குளம் பணிகள் மற்றும் வேலம்பாளையத்தில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனையின் கட்டிட பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட அவர், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையிலும், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி முன்னிலையிலும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீது மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: