சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியில் சுகாதார வளாக வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

சிவகாசி, டிச. 27: சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியில் திறந்தவெளி கழிப்பிட பயன்பாட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய சுகாதார வளாக கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி பகுதியில் ஒரு சில கிராமங்களில் சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில் இருந்த போதிலும் பெரும்பாலான கிராமங்களில் பூட்டியே கிடக்கின்றன. சில கிராமங்களில் சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் கூட, போதிய விழிப்புணர்வு இல்லாததால் இன்றளவும் திறந்தவெளி கழிப்பிடத்தை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியில் கிராமத்தில் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தும் அவலநிலை தொடர்கின்றது. இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த கிராமத்தில் போதிய சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை. கிராமத்தில் சுகாதாரம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதததால் கிராம மக்கள் கண்மாய், முள்வேலி செடிகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பெண்களுக்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் செயல்படாமல் சேதமடைந்து பூட்டிக் கிடக்கின்றது. தற்போது கட்டப்படும் புதிய வீடுகளில் கழிப்பறை வசதிகள் கட்டும் நிலையில், இந்த கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதிகள் கிடையாது. தனிநபர் கழிப்பிடத்திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் சேதமடைந்தும் குப்பைக்கழிவுகள் மற்றும் பழைய துணிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் வசதிகள் செய்து சுகாதார வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: