திருச்சுழியில் அடிக்கடி விபத்து டூவீலர் மோதி சிறுமி காயம்

திருச்சுழி, டிச. 27: திருச்சுழி அருகே சத்திரம் காலனி உள்ளது. இக்காலனி திருச்சுழியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகள் ஹன்சிகா (7) சாலையோரம் நடந்து வந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத டூவீலர் சிறுமி மீது மோதியதில் படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அடிக்கடி விபத்து ஏற்பட்டுவரும் பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திருச்சுழி இன்ஸ்பெக்டர் நிதிகுமார் இப்பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என கூறியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: