×

காந்திநகர் புறநகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள சுகாதார வளாகம், புறக்காவல் நிலையம் செயல்பாட்டிற்கு வருமா? அருப்புக்கோட்டை மக்கள் எதிர்பார்ப்பு

அருப்புக்கோட்டை, டிச. 27: அருப்புக்கோட்டை காந்திநகர் நேரு நகர் பகுதியில் நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு குழுமம் சார்பில் ஒரு கோடியே பத்து லட்சம் மதிப்பீட்டில் புறநகர் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா கடந்த 4 மாதத்திற்க்கு முன்பு நடந்தது. இந்த பேருந்து நிறுத்தத்தில் மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் அரசு பேருந்துகளும், திருச்செந்தூர், தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை செல்லும் பேருந்துகளும் காந்திநகர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது. மேலும், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சுழி, கமுதி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.

தூத்துக்குடியிலிருந்து இரவு நேரங்களில் சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளும் இங்கு வந்துதான் செல்கின்றன. இந்நிலையில் பயணிகள் அமர்வதற்கு போதுமான இருக்கை வசதி இல்லை. மேலும் ஆண்கள், பெண்கள், என தனித்தனியாக கட்டப்பட்ட சுகாதார வளாகமும் பூட்டியே கிடக்கிறது. இதனால் வெளியூர் செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பெண் பயணிகள் அவசரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் புறக்காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இங்கு போலீசார் இருப்பதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘காந்தி நகர் பகுதி மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மேம்பாலத்திற்கு கீழ்ப்பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் போதிய விளக்கு வசதி இல்லை. இரவு நேரங்களில் சென்னை செல்வதற்கு அதிக பயணிகள் வருகின்றனர்.மேலும் அதிகாலை நேரங்களில் சென்னையிலிருந்து தூத்துக்குடி திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பயணிகள் வருகின்றனர். இந்தப் பகுதியில் திருட்டு பயம் அதிகம் உள்ளதால் பெண்கள் ஒருவித பயத்துடன் வந்து செல்கின்றனர். புறக்காவல் நிலையத்தில் போலீசார் பணியில் இருந்தால் பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி பேருந்து நிறுத்தத்திலிருந்து பஸ்களில் ஏறி இறங்கி செல்வர்.மேலும் குடிப்பதற்கு தண்ணீர் வசதியும் இல்லை. எனவே நகராட்சி நிர்வாகம் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்கவும்,குடிநீர் வசதி ஏற்படுத்தவும், மாவட்ட காவல்துறை நிர்வாகம் புறக்காவல் நிலையத்தில் போலீசார் பணியில் அமர்த்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Gandhinagar ,Aruppukottai ,
× RELATED செல்போன்கள் திருட்டு