×

பெண்களை இழிவுபடுத்தி பதிவு எஸ்டிபிஐ கட்சி போராட்டம்

கீழக்கரை, டிச.27: கீழக்கரையில் வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டவரை கைது செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் அகமது அலி நகர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ரைசுதீன்(42). இவர் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கட்சியின் மாநில துணை தலைவராக உள்ளார். இவர் சில நாட்களுக்கு முன் பேஸ்புக்கில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து பெண்கள் முகம்மது ரைசுதீன் வீடு அருகே ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் முகம்மது ரைசுதீனை கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்த முகம்மது ரைசுதீனை சிறையில் அடைக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஏராளமான பெண்கள் தங்கையாநகர் தண்ணீர் தொட்டி அருகில் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். முகம்மது ரைசுதீன் வீடு முன் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் ரியாஸ் கான், ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் மற்றும் பிரமுகர்களுடன் கீழக்கரை டி.எஸ்.பி.சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐந்து கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags : STPI ,
× RELATED பழநியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த...