ஐயப்பன் கோயில் மண்டல பூஜை

ராமநாதபுரம், டிச.27: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு பேட்டை துள்ளல் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழா நடந்தது. இதனை முன்னிட்டு டிச.17ல் கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. பத்து நாள் விழாவில் கோயில் வளாகத்திற்குள் சுவாமி தினமும் இரு வேளை வலம் வந்த பின் பூதபலி பூஜை நடந்தது. மண்டல பூஜை விழா நேற்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இங்குள்ள பஸ்ம குளத்தில் பக்தர்கள் தங்கள் உடல் முழுவதும் பல்வேறு வண்ணம் பூசி பேட்டை துள்ளல் ஆடினர். இதையடுத்து ஐயப்பன் ஆராட்டு விழா நடந்தது. பால், தயிர், பன்னீர், நெய் உட்பட 11 வகை அபிஷேகம் ஐயப்பனுக்கு நடந்தது. உற்சவர் ஐயப்பனை பக்தர்கள் பல்லக்கில் சுமந்து கோயில் வளாகத்தில் வலம் வந்தனர். விழா நிறைவையொட்டி கொடி இறக்கப்பட்டது. பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர். அன்னதானம் வழங்கப்பட்டது. வல்லபை ஐயப்பா சேவை நிலையம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மோகன் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை ஏற்பாடுகளை செய்தனர்.

Related Stories: