மேலூர்,கொட்டாம்பட்டி பகுதியில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் வேண்டும் விவசாய சங்கத்தினர் வலியுறுத்தல்

மேலூர், டிச.27: மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் உடனடியாக கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலூர் பகுதியில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பெரியாறு பாசன நீர் ஒரு மாதத்திற்கு முன்பே திறக்கப்பட்டது. இத்துடன் தொடர் மழையும் சேர்ந்து கொள்ள, விவசாயம் சிறப்பாக நடைபெற்று, தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனால் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மட்டும் அல்லாமல், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலமாக ஏற்கனவே சென்னகரம்பட்டி, அட்டப்பட்டி, மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் 3 ஆண்டுகள் நெல் கொள்முதல் செய்தது போல், இந்த ஆண்டும் கொள்முதல் செய்ய குழுக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் கொட்டாம்பட்டி பகுதியில் இந்த ஆண்டு அதிக மழை காரணமாக நெல் உற்பத்தி அதிகளவு காணப்படுவதால், அப்பகுதியிலும் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகா அளவில் கூட்டுறவு துறையினர் செய்யும் கொள்முதலுக்கு, அதற்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்க காலதாமதம் ஆனதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேநேரத்தில் கடந்த ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 27 நெல் கொள்முதல் நிலையங்களில், பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாளில் வரவு வைக்கப்பட்டது. தற்போது கூட்டுறவு துறை மூலம் 9 இடங்களில் மட்டும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இது குறித்து, கடந்த ஆண்டை போல் 27 இடங்களிலும் வாணிப கழகம் மூலமாகவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாக நேரடியாக கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட வேண்டும். கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் கச்சிராயன்பட்டி, தும்பைப்பட்டி, கம்பூர், திருச்சுனை பகுதியில் புதிய கொள்முதல் நிலையங்களை திறந்தால் அப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மதுரை மாவட்ட செயலாளர் அருண் கூறினார்.

Related Stories: