ஊட்டி, டிச. 27: நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்திற்கு தலைவர் நியமிக்கப்படாததால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. எனவே, விரைந்து தலைவரை நியமிக்க நுகர்வோர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 ஆகிய இரு சட்டங்களும், நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகள் 90 நாட்களில் தீர்வு காணப்படும் என்பதை உறுதி செய்கிறது.
ஆனால், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பல வழக்குகள் தீர்வு காணப்படவில்லை. இதனால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் நோக்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் இங்கிருந்து சென்ற பின் கடந்த ஒரு ஆண்டாக புதிய தலைவர் நியமிக்கப்பட வில்லை. இதனால் வழக்குகள் விசாரிக்கப்படாமல் வாய்தா வழங்கப்படுவதால் பொதுமக்கள் அலைகழிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.நுகர்வோர் வழக்குகள் பெரும்பாலும் சிறிய அளவு பணம் தொடர்பானவை. வழக்குகள் நீண்டகாலம் இழுத்தடிக்கும் போது அதற்காக மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம். எனவே நுகர்வோர் நீதிமன்றத்தை நாடுவதற்கு தயக்கம் ஏற்படுகிறது. தலைவர் இல்லாததால் செயல்படாமல் உள்ள சில மாவட்டங்களில் நுகர்வோர் வழக்குகள் லோக் அதாலத் மூலம் விசாரித்து தீர்வு காணப்படுகிறது. எனவே, நீலகிரி மாவட்ட நுகர்வோர் ஆணையத்திற்கு உடனடியாக தலைவர் நியமிக்கவும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிவாரணம் பெரும் உரிமையை மக்களுக்கு வழங்கிடவும் வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.