16வது கொரோனா தடுப்பூசி முகாம் கோத்தகிரியில் கலெக்டர் ஆய்வு

ஊட்டி, டிச. 27: நீலகிரி  மாவட்டத்தில் நேற்று 16வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.  கோத்தகிரி மற்றும் ஜெகதளா பேரூராட்சி பகுதிகளில் கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு  ஆய்வு செய்தார். தமிழகத்தை பொருத்த வரை கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை  விரைந்து மேற்கொள்ள வசதியாக வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள்  நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 16வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்  நேற்று நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  மருத்துவமனைகள், பொது இடங்கள், சுற்றுலா தலங்கள் உட்பட 254 மையங்களில்  நடைபெற்றது. இதில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி  செலுத்தி கொண்டனர்.  

ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட கட்டபெட்டு,  கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட ஓரசோலை ஆகிய பகுதிகளில் நடந்த முகாமினை  மாவட்ட கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது  சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி, செயல் அலுவலர் மணிகண்டன்  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதனிடையே நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 5400  பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம், நீலகிரியில்  முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியோர்  எண்ணிக்கை 10  லட்சத்தை கடந்துள்ளது.

Related Stories: