கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையில் 50 சதவீத பிரசவம்

கோவை, டிச.27: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையில் 50 சதவீதம் பிரசவம் நடப்பதாக டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். தேசிய குடும்பநல அமைச்சகம் சார்பில், இந்தியா முழுவதும் மகப்பேறு சிகிச்சகைள், மகப்பேறு அறுவை சிகிச்சைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 5 ஆண்டுகளில் 10 சதவீதம் வரை மகப்பேறு அறுவை சிகிச்சை அதிகரித்துள்ளது என தேசிய குடும்ப நல அமைச்சக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில், தமிழகத்தில் கடந்த, 2015-16ம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வில், அரசு மருத்துவமனைகளில் 26.5 சதவீதமாக இருந்த மகப்பேறு அறுவை சிகிச்சை தற்போது, 36 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 57 சதவீதத்தில் இருந்து 64 சதவீதமாக உயர்ந்துள்ளது. தவிர, கோவை மாவட்டத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் 29.6 சதவீதமாக இருந்த மகப்பேறு அறுவை சிகிச்சைகள், தற்போது 35.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 63.3 சதவீதத்தில் இருந்து 73.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதிலும் தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நேரத்தில், குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர். தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையிலும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மகப்பேறு அறுவை சிகிச்சை அதிகரித்துள்ளதால், பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அரசு மருத்துவனையின் டீன் நிர்மலா கூறியதாவது: அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளில் சிக்கலான பிரசவங்களை அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இதனால், தாய், சேயின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

தினமும் 20-ல் இருந்து 25 பிரசவம் நடக்கிறது. இதில், 50 சதவீதம் பேருக்கு அறுவை சிகிச்சை முறையில்தான் குழந்தை பிறக்கிறது. கோவை அரசு மருத்துவமனையில் 90 சதவீதம் மிகவும் சிக்கலான பிரசவங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இதே நிலை தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: