சென்னை, டிச.27: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்காமல் நீர்வழி கால்வாய்களின் மூலம் கடலில் சென்று கலக்கும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கடந்த காலங்களில் பெய்த கனமழை காரணமாக மழைநீர் தேங்கிய பல்வேறு இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களின் ஆலோசனைகளின்படி, விடுபட்ட மழைநீர் வடிகால்களை இணைக்கவும், பழுதடைந்த மழைநீர் வடிகால்களை புனரமைக்கவும், தேவையான இடங்களில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும் மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டு, அதுகுறித்து விரிவான திட்ட அறிக்கை அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி முதற்கட்டமாக சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளான தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய 144 இடங்களில் 45 கி.மீ. நீளத்திற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் விடுபட்ட மழைநீர் வடிகால்களை இணைக்கவும், பழுதடைந்த மழைநீர் வடிகால்களை புதுப்பிக்கவும் மற்றும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளவும் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சீரிய முயற்சியால் இத்திட்டப் பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் சார்பில் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாடு நீடித்த, நிலையான நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த 144 இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.