×

பாலாற்றில் மூழ்கி சிறுமி உள்பட மூன்று பேர் சாவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றப்பள்ளி அருகே பாலாற்றில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து, ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ மற்றும் புகைப்படம் எடுக்கவோ மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தை முன்னிட்டு, சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் அச்சிறுப்பாக்கம் மழைமலைமாதா தேவாலயத்திற்கு சென்றனர். அப்போது இருங்குன்ற பள்ளி அருகே, பாலாற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.

அனைவரும் குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக லியோன்சிங்க ராஜா (38)அவரது மகள் பெர்சி (16), லியோன் சிங்கராஜாவின் அண்ணன் சேகரின் மகன் லெனின்ஸ்டன்(20) ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்புத்துறை வீரர்கள் படகுமூலம் மூன்று குழுக்களாக பிரிந்து தீவிரமாக, அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்று மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, 3 சடலங்களையும் மீட்டனர். இது தொடர்பாக, படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...