×

காக்களூர் தொழிற்பேட்டையில் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்: அதிகாரிகள் குழு ஆய்வு

திருவள்ளூர்: காக்களூர் தொழிற்பேட்டையில் துர்நாற்றம் ஏற்படும் வகையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் கால்வாய்கள் அமைத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் காக்களூர் தொழில்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த தொழில்பேட்டையில் மழைநீர் தேங்கியுள்ளதாலும், அங்குள்ள தொழிற்சாலை மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பெரும் இடையூறும் ஏற்பட்டது. இந்த நீரால் தொழிற்சாலைகளும், குடியிருப்புகளிலும் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தேங்கிய மழைநீரை ஏரிக்கு வெளியேற்றவும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் உடனே காக்காளூர் தொழிற்பேட்டையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை, பொதுப்பணித்தறை, ஊரக வளர்ச்சித்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி காக்களூர் தொழிற்பேட்டையில் இருந்து தண்ணீர் குளம் ஏரிக்கு மழை நீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் காக்களூர் கோயில் பகுதியிலிருந்து கால்வாய் அமைத்து, அதில் ராட்சத குழாய்கள் பொருத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காணுவதற்காக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவை சேர்ந்த வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர், செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதிநாதன், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜீலு, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜ்கமல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பணிகளை விரைந்து முடிக்கவும், இரவு நேரங்களில் விபத்து ஏற்படாத வண்ணம் அறிவிப்பு பலகைகளை வைக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Tags : Koggalur Industrial Estate ,
× RELATED முட்டுக்காட்டில் சுற்றுலா பயணிகளை...