ஆவடி மாநகராட்சியில் ரூ.32.5 லட்சத்தில் பூங்கா, போர்வெல்: அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் சிறுவர் பூங்கா, போர்வெல்லுடன் கூடிய குடிநீர் தொட்டியை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திறந்து வைத்தார். ஆவடி மாநகராட்சி 7வது வார்டு திருமுல்லைவாயல், வெங்கடேஸ்வரா நகரில் எஸ்.வி.டி.நகர் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா, 2014ம் ஆண்டு அப்போதைய நகராட்சி தலைவராக ஆவடி நாசர் இருந்தபோது ரூ.75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது.  இதில் வாக்கிங் செல்ல நடைபாதை, சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சறுக்குப்பாதை, மின்விளக்குகள், இருக்கைகள், சுற்றுசுவர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பூங்காவை வெங்கடேஸ்வரா நகர், சுப்பிரமணிய நகர், திருமலை நகர் பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தினர்.

மேலும், இந்த பூங்கா 2016ம் ஆண்டு இறுதி வரை முறையாக பராமரிக்கப்பட்டது.  அதன்பிறகு, பூங்கா பராமரிப்பை நகராட்சி நிர்வாகம் கைவிட்டது.  இதன்பிறகு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி உடைந்து கிடந்ததால் சிறுவர்கள், சிறுமிகள் விளையாட முடியவில்லை. மேலும், நடைபாதையும் பல இடங்களில் உடைந்ததால் பெண்கள், முதியோர் வாக்கிங் செல்ல முடியவில்லை. இதோடு மட்டுமல்லாமல், மின் விளக்குகள் சேதமடைந்து கிடந்தன.  இதனால், பூங்கா இரவில் இருள் சூழ்ந்துகிடந்தது. மேலும், அங்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிட்டு காடு போல் காட்சி அளித்தன.

இதனையடுத்து, அங்கு சமூக விரோதிகள் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பூங்காவை சீரமைக்க வலியுறுத்தினர். ஆனால், அப்போதைய அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தனர். இதனால், பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர். இதற்கிடையில், தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத் துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, அவர் பூங்காவை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் பிறகு, பூங்கா ரூ.25 லட்சத்தில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதனையடுத்து நேற்று காலை சீரமைக்கப்பட்ட பூங்காவை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், அவர் அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் கூறிய குறைகளை உடனடியாக அதிகாரிகளிடம் கூறி நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார். திருமுல்லைவாயல், எஸ்.எஸ்.புரத்தில் ரூ.7.5 லட்சம் செலவில் போர்வெல்லுடன் கூடிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். பின்னர், அவர் திருமலைவாசன் நகருக்கு  சென்று பொது நல சங்க நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சத்தியசீலன், மாநகர திமுக செயலாளர் பேபி வி.சேகர், வட்ட செயலாளர் முல்லை ராஜ், மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொது நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: