பாளையம் கிராமத்தில் பொங்கல் மண் பானை தயாரிப்பு பணி விறுவிறுப்பு

பெரம்பலூர்,டிச.27: பாளையம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் தைமாதம் 1ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகரீக மாற்றத்தால் ஈயம், பித்தளை, சில்வர் பாத்திரங்களில் சமைத்து படிப்படியாகமாறி இன்று குக்கரில் பொங்கல் வைக்கும் நிலைக்கு நகரவாசிகள் வந்துவிட்டாலும், பல ஆயிரம் கிராமப்புற மக்கள் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்காகவே எங்காவது ஒரு மூலையில் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிகள் நடந்தபடியேதான் உள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் குயவர் இனத்தவர் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரம்பரை தொழிலான மண்பாண்டம் தயாரிப்பை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். 30க்கும் மேற்பட்டோர் மேஸ்திரி, கொத்தனார், பெயிண்டர் என கட்டுமான தொழிலுக்கு மாறிவிட்டாலும், பரம்பரை தொழிலை இன்றளவும் சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். குறிப்பாக பெரியசாமி (64), இவரது மனைவி சந்திரா(59), பிச்சை (70), சப்தோஷம் (64), முருகேசன்(55), குப்பம்மாள் (49) உள்ளிட்டோர் மண்பானைகள் தயாரித்து விற்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களரம்பட்டி ஏரிமண், மனை மண் குழைத்து மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே நவம்பர் தொடக்கத்தில் கன மழை பெய்ததால் கார்த்தி கை தீபத்திற்கு இங்கு அகல் விளக்குகள் தயாரிக்க முடியாமல் போனது. மண் பானைகள் ஒருபடி அரிசிக்கும், 2 படி அரிசிக்கும், முக்கால் படி அரிசிக்கும் ஏற்றவகையில் பானைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை பெரம்பலூரில் மொத்த வியாபாரிகளிடம் விற்கப்படுவதோடு, மாட்டு வண்டிகளில் ஊர் ஊராக கொண்டு சென்றும் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

Related Stories: