முள்ளக்காடு அருகே தொழிலாளியின் குடிசை தீக்கிரை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல்

ஸ்பிக்நகர், டிச.27:முள்ளக்காடு அருகே தொழிலாளியின் குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதில் மாற்றுத்திறனாளி பெண் உள்பட 6 பேர் உயிர்தப்பினர். பாதிக்கப்பட்டவர்களை கனிமொழி எம்பி சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்கினார்.

தூத்துக்குடிமாவட்டம் முள்ளக்காடு அருகேயுள்ள நேசமணி நகரைச் சேர்ந்தவர் பால்துரை. இவரது மனைவி முத்துச்செல்வி(52). இவர்களுக்கு ஆனந்தி(28), அன்னலட்சுமி(21) என்ற மகள்களும், ஆனந்தராஜ்(26), ஆத்திவேல்(18), முருகவேல்(15) என்ற மகன்களும் உள்ளனர். பால்துரை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணிஅளவில் அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. கூரை வேகமாக பற்றி எரிந்து நெருப்பு துகள்கள் கீழே விழுந்ததை கண்டதும் அலறி அடித்தபடி மாற்றுத்திறனாளியான ஆனந்தியை தூக்கிக்கொண்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எஸ்ஐ முத்துமாலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஸ்பிக் மற்றும் தெர்மல் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்த பணம், நகை உள்ளிட்ட பொருட்கள், சான்றிதழ்கள், ரேசன்கார்டு, ஆதார் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகள், பேங்க், போஸ்ட்ஆபீஸ் பாஸ்புக், வீட்டு பத்திரம், பட்டா, துணிமணிகள், கட்டில்கள் உட்பட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது. மின்கசிவால் தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவலறிந்த கனிமொழி எம்பி, சம்பவ இடத்துக்கு சென்று தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரண பொருட்கள், பணம் கொடுத்து ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் மேகநாதன், பொன்னரசு, நிர்வாகி ராஜதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: