×

நெல்லை அருகே கார் மோதி இளம்பெண் படுகாயம் பொதுமக்கள் சாலை மறியல்

நெல்லை, டிச. 27: நெல்லை ராமையன்பட்டி சிவாஜிநகரை சேர்ந்த தளவாய் மகள் சுபாஷினி (18). நெல்லை டவுனிலுள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றிரவு 9.30 மணிக்கு வேலை முடிந்து டவுன் பஸ்சிலிருந்து ராமையன்பட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர் அவர் சாலையை கடக்க முயற்சித்த போது நெல்லையிலிருந்து சங்கரன்கோவிலை நோக்கி சென்று ெகாண்டிருந்த கார் திடீரென சுபாஷினி மீது மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த சுபாஷினியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பியோடி, அங்கு வந்த போலீசாரிடம் நடந்த விவரங்களை தெரிவித்தார். உடனே அவரை விசாரணைக்காக போலீசார் மானூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையறிந்து அங்கு வந்த சுபாஷினியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்தை கண்டித்தும் கார் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தியும் ராமையன்பட்டி பஸ் நிறுத்தத்தில் இரவு 10 மணியிலிருந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தாழையூத்து டிஎஸ்பி ஜெபராஜ் மற்றும் மானூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கார் டிரைவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் இரவு 10 மணியிலிருந்து 11.30 மணிவரை ஒன்றரை மணி நேரம் நடந்ததால்  அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Tags : Nellai Public ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது