17ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் கடலூரில் கடலில் பால் ஊற்றி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

கடலூர், டிச. 27:   கடலூரில் 17ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலில் பால் ஊற்றியும், நினைவுத் தூணில் மலர் தூவியும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர், பொது நல அமைப்புகள் மற்றும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மீனவ அமைப்பினர் மவுன ஊர்வலம் நடத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி இந்தோனேஷியா அருகே உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் எழுந்த சுனாமி பேரலைகள் தமிழக கடற்கரையை தாக்கி, ஆயிரக்கணக்கானவர்களை பலிவாங்கியது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் பலியானார்கள். சுனாமி பேரலையால் பலியானவர்களின் 17ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு சுனாமியில் பலியானவர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் அதன் தலைவர் சுப்பராயன் தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கடலில் பால் ஊற்றியும், துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். கடற்கரை மணலில் மெழுகுவர்த்தி ஏற்றியும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுனாமியால் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. இதனால் திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், முதுநகர், கிஞ்சம்பேட்டை ஆகிய இடங்களில் மீன்மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படும் கடலூர் மீன்பிடி துறைமுகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இதுபோன்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு சின்னம் பகுதியில் திமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு தலைமையில் ஐயப்பன் எம்எல்ஏ, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நகர செயலாளர் ராஜா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட மாணவரணி நடராசன், மீனவர் அணி தமிழரசன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிரகாஷ், தினகரன், மாவட்ட பிரதிநிதி கோவலன், கணேசன், நிர்வாகிகள் சலீம், சுந்தரமூர்த்தி, மாணவரணி அகஸ்டின், இளைஞரணி இளையராஜா, பிரசன்னா, பாஸ்கரன், ஜெயசீலன், ஜெயசந்திரன், குப்புராஜ், ராஜா, சன் பிரைட் பிரகாஷ், தகவல் தொழில்நுட்பம் சரத், பிரவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சம்பத், மீனவர் அணி தங்கமணி, நிர்வாகிகள் சேவல் குமார் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர். மீனவர் அமைப்பு சார்பில் அமைதி ஊர்வலம் மற்றும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. தலைவர் ஏகாம்பரம் தலைமையில் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் சுனாமி நினைவு சின்னம் மற்றும் சில்வர் பீச் கடற்கரையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராம பகுதியிலும் இது போன்று நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 புவனகிரி: சுனாமி பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் நடந்தது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பாண்டியன் பங்கேற்று புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் கடலில் பால் மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ அருள், அதிமுக மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், ஒன்றிய செயலாளர் கோவி ராசாங்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், மீனவரணி நிர்வாகி வீராசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரங்கம்மாள், ரவி, ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு புதுச்சேரி, மே 22: கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை வேதனையுடன் தெரிவித்தார். ஜி20 தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட ஜி20 நாடுகளில் நேற்று கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. நீடித்த, நிலையான கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கடல்சார் மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டறியவும், இதுதொடர்பாக ஜி20 நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அனைத்து கடல்சார் மாநிலங்களிலும் கடற்கரைத் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை மற்றும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:நிலத்திலிருந்து கழிவுகளை அப்புறப்படுத்த கடலில் கொட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்களின் உணவுக்காக மாறி பின்பு நாமே மீன்களை உண்கிறோம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சுகாதார கேட்டினால் ஏற்படும் நோய்களை தடுத்ததன் மூலம் கிட்டத்தட்ட ரூ.60 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சார்ந்த மாநிலம். எனவே, புதுச்சேரியில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிச்சயமாக கொண்டு வர வேண்டும். கடலை சுத்தப்படுத்துவதன் மூலமாக நமது குடலும் சுத்தப்படுத்தப்படுகிறது. நிச்சயமாக இது இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கவர்னர் உறுதிமொழி வாசிக்க, அதனை அனைவரும் ஏற்றனர். தொடர்ந்து, தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் பேரணியை கவர்னர் தொடங்கி வைத்தார். மேலும், சுற்றுச்சூழல் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். சபாநாயகர் செல்வம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.