பேரறிஞர் அண்ணா சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும்

குறிஞ்சிப்பாடி, டிச. 27:  குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, முத்துமாரியம்மன் கோயில் எதிரில், கடந்த திமுக ஆட்சியின் போது 2006-07ம் ஆண்டில் 15 லட்சம் ரூபாய் செலவில் பேரறிஞர் அண்ணா சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் இருக்கைகள், நடைபாதைகள், செயற்கை நீரூற்று, மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த 10 ஆண்டு காலமாக, அதிமுக ஆட்சியின் போது பூங்காவை முறையாக பராமரிக்காததால் புதர் மண்டி, இருக்கைகள் பாழடைந்து விளையாட்டு சாதனங்கள் உடைந்தும் கிடக்கின்றன. இதனால் சிறுவர்கள் மற்றும் பெண்கள், பூங்காவிற்கு வருவதில்லை. இதைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, குறிஞ்சிப்பாடி பொதுமக்கள் பொழுதைப் போக்கும் விதமாக பேரறிஞர் அண்ணா சிறுவர் பூங்காவை சீரமைத்து, பொலிவு பெறச் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: