பேச்சிப்பாறையில் பரபரப்பு அரசு விருந்தினர் மாளிகை ஊழியர் கழுத்தில் கத்தியால் குத்தி தற்கொலை கடன் பிரச்னையால் விபரீதம்

குலசேகரம், டிச. 27: குமரி  மாவட்டம் பேச்சிப்பாறையில் அரசு விருந்தினர் மாளிகை ஒப்பந்த ஊழியர் கடன் பிரச்னை  காரணமாக கத்தியால் குத்தி தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேச்சிப்பாறையை  அடுத்த குற்றியாறு அரசு ரப்பர் கழக காலனியை சேர்ந்தவர் சிவசந்திரன்(25).  கொச்சியில் மத்திய அரசு விருந்தினர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி  வந்தார். இந்தநிலையில் சொந்தமான வீடு கட்ட பேச்சிப்பாறை பகுதியில் இடம்  வாங்கியதில் கடன் இருந்து வந்துள்ளது. இதையடுத்து கடனை அடைப்பதற்கும்,  புதிதாக வீடு கட்டுவதற்கு பல முயற்சி எடுத்து வந்தார். இதனிடையே ஏற்கனவே  வாங்கி கடன்களை செலுத்த முடியாமல் திணறி வந்துள்ளார்.

இந்தநிலையில கடந்த இருதினங்களுக்கு முன் அந்த பகுதியில் மின்சாரம் தாக்கி இறந்த பிரவீன் குமாரின்  இறுதி சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். பின்னர் கடன் நெருக்கடி  குறித்து வீட்டினரிடம் மனம்நொந்து பேசியுள்ளார். இந்தநிலையில் நேற்று  முன்தினம் வீட்டில் ரப்பர் பால் வெட்டும் கத்தியை எடுத்து  தனது கழுத்தில் குத்தி  கிழித்துள்ளார். இதில் ரத்தம் பீறிட்டு சிவசந்திரன் கீழே சாய்ந்தார். அதிர்ச்சியடைந்த  வீட்டினர் அவரை மீட்டு குலசேரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு  சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே அவர் இறந்து  விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பேச்சிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பேச்சிப்பாறை  பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: