நாகர்கோவிலில் படுக்கை அறையில் இறந்து கிடந்த வாலிபர்

நாகர்கோவில், டிச.27 : நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மகன் ஆலன் (35). இவர், வெட்டூர்ணிமடத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. கடந்த 24ம் தேதி இரவு 10 மணியளவில் அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ஆலன்,  மறுநாள் (25ம்தேதி) காலை வெகு நேரமாகியும் எழுந்திருக்க வில்லை. கிறிஸ்துமஸ் என்பதால் காலை 10 மணியளவில் அவரது தந்தை சென்று ஆலனை எழுப்ப சென்ற போது, அவர் படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடலில் எந்த வித அசைவும் இல்லை. உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்த போது, ஆலன் இறந்தது தெரிய வந்தது. அதிக போதையில் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அவரது தந்தை மோகன்தாஸ் அளித்த தகவலின் பேரில் வடசேரி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். ஆலன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக போதையால் ஆலன் இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர்.

Related Stories: