தேனி மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி

தேனி, டிச. 25: தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி, பெரியகுளம் சப்கலெக்டர் ரிஷப், உத்தமபாளையம் கோட்டாட்சியர் கௌசல்யா, மாவட்ட வன அலுவலர் வித்யா முன்னிலை வகித்தனர். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் வரவேற்றார். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன்: மேகமலை வனப்பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் மறுகுடியமர்வு பட்டியல் தயாரிப்பு பணியை நிறுத்த வேண்டும். தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன்: மேற்குத்தொடர்ச்சி மலைக்கிராமமான அகமலை பகுதியில் உள்ள வனகிராம பகுதியில் வசிக்கும் பழங்குடியின விவசாயிகளுக்கு வங்கி சேவை மற்றும் உதவி பெற வழிகாட்டி ஒருவரை மாவட்ட நிர்வாகம் நியமிக்க வேண்டும். கண்மாய்க் கரைகளில் பனை விதை நடவு செய்யும்போது, கரைகளின் நீளத்தை அளந்து விதை நடவுக்கு போதிய இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.

விவசாயி சீனிராஜ்: அம்மச்சியாபுரத்திற்கும் அரண்மனைப்புதூருக்கும் இடையே உள்ள வைகை பாலத்தை ஒட்டிய சாலையை நெடுஞ்சாலைத்துறை மூலம் அகலப்படுத்தி விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி கருப்பையா: தேனி மாவட்டத்தில் வருவாய் ஏட்டில்தான் குளங்கள் உள்ளன. பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால், நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. மற்றொரு விவசாயி: பாப்பயன்பட்டி கண்மாய் ஆக்கிரமிப்பு குறித்து நில அளவீடு செய்தும், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

விவசாயி வெற்றிவேல்: அகமலை கிராமச் சாலை சேதமடைந்திருப்பத்தால், நெடுஞ்சாலைத்துறை மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் பதிலளித்து பேசுகையில், ‘தமிழக அரசு நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல, தேனி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தயவு தாட்சண்யமின்றி விரைவில் அகற்றப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: