×

திருப்புல்லாணியில் 41 பள்ளி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும்

கீழக்கரை, டிச.25: திருப்புல்லாணி ஒன்றியத்தில் பலவீனமாக உள்ள 41 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்லையில் தனியார் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பள்ளியில் ஏற்பட்ட இந்த கட்டிட விபத்து காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து சேதமடைந்த, பயன்பாட்டுக்கு உதவாத கட்டிடங்களை உடனடியாக இடிக்க அரசு உத்தரவிட்டது.

இதை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்கள் உத்தரவின் பேரில் கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு அதற்கான மேல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 41 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 32 பள்ளிக்கட்டிடங்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்ததும் கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்புல்லாணி ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

Tags : Thirupullani ,
× RELATED பதநீர் சீசனால் கருப்பட்டி தயாரிப்பு பணி துவக்கம்