×

தைப்பூச பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நலன் வேண்டி பழநியில் நடந்த ஹோமம்

பழநி, டிச.25: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் தைப்பூசம் விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். இவ்விழா ஜன.12ம் தேதி துவங்குகிறது. எனினும், தற்போதே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலன் வேண்டி நேற்று வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கையம்மன் கோயிலில் திசா ஹோமம் நடந்தது கோயில் அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பூஜைகளை மேற்கொண்டனர். புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி நடந்தது.

இதனைத்தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட தீர்த்தக் கலசம் கோயில் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வீரதுர்க்கையம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையில் பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், கண்காணிப்பாளர் வடிவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உபயதாரர்கள் சித்தனாதன் சன்ஸ் எஸ்.ஜி. சிவநேசன், எஸ்.ஜி தனசேகரன், எஸ்.ஜி.ரவீந்திரன், எஸ்.ஜி.பழனிவேல், எஸ்.ஜி.ராகவன், எஸ்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Homa ,Palani ,Thaipusam Pathayathri ,
× RELATED பழநி நகராட்சி மக்கள் கவனத்திற்கு