காட்டுப்பன்றிகளை ஒழிக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம்,டிச.25: காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்து வருவதால் அவற்றை ஒழிக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மறைந்த தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து நடந்த கூட்டத்தில்  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதன்படி தமிழகத்தில் விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெறுவதற்கு இதற்கு முன்பு 2006ம் ஆண்டு வரை காலக்கெடு இருந்தது தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த காலக்கெடுவை 2013ம் ஆண்டு வரை நீடித்து உத்தரவிட்டதற்காக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதுவரை இல்லாத அளவில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்ணிணைப்பு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே விவசாயிகள் பலர் 25 ஆயிரம் திட்டத்திலும் 50,000 திட்டத்திலும் மின்னிணைப்பு பெறுவதற்காக தமிழக மின்வாரியத்தில் பணம் செலுத்தி உள்ளனர் இந்த பணத்தை திரும்பி வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் பல ஏழை,எளிய விவசாயிகள் பலன் பெறுவார்கள். இதேபோல கோவை மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்து வருவதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

எனவே காட்டுப்பன்றிகளை ஒழிக்க, தமிழக அரசு வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி கோவை,ஈரோடு, திருப்பூர்,நீலகிரி உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மறைந்த நாராயணசாமி நாயுடு,வழுக்குப்பாறை பாலு ஆகியோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories: