×

மாணவிகள் பாலியல் தொல்லை தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: டிஐஜி சத்யபிரியா பேச்சு

திருக்கழுக்குன்றம், டிச. 25: மாணவிகள் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா கூறினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் அரசினர் உயர் நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்தியபாமா, வல்லிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா பார்த்தசாரதி, துணை தலைவர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா கலந்து கொண்டு பேசியதாவது.

மாணவிகள், தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளை உடனடியாக எவ்வித  தயக்கமுமின்றி ஆசிரியரிடமும், பெற்றோரிடமும் தெரிவிக்க வேண்டும். மேலும், போலீசில் எந்த வொரு அச்சமுமின்றி தயங்காமல் தெரிவிக்க வேண்டும். அப்படி தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் ,நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.சில நேரங்களில் வெளியிடங்களில் மட்டுமின்றி, வீட்டில் சில உறவினர்களோ, பள்ளியில் ஆசிரியர்களோ தவறாக நடக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் குறித்து உடனடியாக பெற்றோருக்கோ அல்லது காவல்துறையினருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.

எனவே, எவ்வித அச்சமுமின்றி நீங்கள் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். முன்னதாக பள்ளி வளாகத்தில் டிஐஜி சத்யபிரியா மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிகுமார், பொருளாளர் சக்கரவர்த்தி, மேலாண்மை குழு தலைவர் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DIG Satyabriya ,
× RELATED மாணவிகள் பாலியல் தொல்லை தொடர்பாக...