×

பண்டிகை தினங்களை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் குவிப்பு: போலீஸ் எஸ்பி வருண்குமார் தகவல்

திருவள்ளூர், டிச.25: மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் தேவாலயங்களுக்கோ அல்லது கோயில்களுக்கோ அல்லது அனுமதிக்கப்பட்ட பொழுதுபோக்கு தலங்களுக்கோ தங்கள் குடும்பத்துடன் செல்ல நேர்ந்தால் தங்கள் வீடுகளை பூட்டிச் செல்வதுடன் அதுபற்றிய தகவல்களை தங்கள் பகுதி காவல் நிலையங்களுக்கு தெரிவிக்க வேண்டும். பண்டிகை தினங்களை முன்னிட்டு இன்று மற்றும் வரும் 31ம் தேதி ஆகிய நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் இரவு ரோந்தில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி பந்தயங்களில் ஈடுபடுவதும், வாகன சாகசங்களில் ஈடுபடுவதும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பொழுதுபோக்கு தலங்கள் மற்றும் விடுதிகளில் உள்ள உரிமையாளர்கள் கோவிட் மற்றும் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரிய அனுமதி பெற்ற பின்பே கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அவையும் அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி நடைபெறக் கூடாது. பண்டிகை தினங்களை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும், பொதுமக்கள் புகாரளிக்க 6379904848 எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Varunkumar ,
× RELATED மாணவிகள் குறித்து அவதூறு வீடியோ பாஜ பெண் நிர்வாகி கைது