×

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கவர்னர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கவர்னர், கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி: மகிழ்ச்சி நிறைந்த சிறப்பான கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து சகோதர-சகோதரிகளுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர-சகோதரிகளுக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தருணத்தில், இயேசு கிறிஸ்துவின் போதனைகளை முழுமையாக நாம் கடைப்பிடிப்போம். நம்மைக் காட்டிலும் வறியவர்களிடத்தே கருணை புரிவோம். இத்திருநாள் நம் வாழ்வில் எல்லையற்ற மகிழ்ச்சியை வழங்கட்டும்.   தெலங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்: அன்பு, சகோதரத்துவம், அமைதி, தியாகம் எளிமை, ஈகை ஆகியவற்றை உலகுக்கு போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுகிறோம்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி: இயேசுபிரான் பிறந்த நன்னாளில்,  அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றமையாக வாழ வேண்டும்.  கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்):  சேவை மனப்பான்மையோடு வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ராமதாஸ்(பாமக நிறுவனர்): இயேசுபிரான் விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்; உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில்  அனைவரும் உறுதி ஏற்போம்.

வைகோ(மதிமுக பொது செயலாளர்): மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம். அன்புமணி(பாமக இளைஞரணித் தலைவர்): இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை,  மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதியேற்போம். டி.டி.வி.தினகரன்(அமமுக  பொது செயலாளர்): உலகெங்கும் அமைதி நிலவி, அனைவரிடமும்  ஆரோக்கியமும் அன்பும் நிறைந்திட வேண்டும். வி.கே.சசிகலா: இயேசு பிரான் பிறந்த  இத்திருநாளில் அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை  மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக வாழ வேண்டும். அண்ணாமலை (தமிழக பாஜக தலைவர்): நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சி, சமாதானம், நல்வாழ்வு ஆகியவற்றை தலைத்தோங்க செய்திட என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

வி.எம்.எஸ்.முஸ்தபா(தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): பொறாமைகள் அகலவும், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். பிரசிடெண்ட் அபூபக்கர்(இந்திய ஹஜ்  அசோஷியேசன் தலைவர்): கிறிஸ்துமஸ் நன்னாளை அரசின் வழிமுறையை பின்பற்றி பாதுகாப்பாக கொண்டாடுவோம்.  இயேசு  அழைக்கிறார் தலைவர் பால்தினகரன்: எல்லாருடைய  இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி, மனநிறைவு, நிம்மதி, சமாதானம்  நிரந்தரமாய் பிறக்க இதயபூர்வமாய் வாழ்த்துகிறேன்.
இதே போல தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமக தலைவர் சரத்குமார் புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாளர்) சங்க மாநில தலைவர் சேம.நாராயணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

‘என்றும் துணை நிற்போம்’ முதல்வர் மு.க.ஸ்டாலின்'
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: அன்பும் அமைதியும் அனைவரது வாழ்விலும் தவழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இவ்விழா கொண்டாடப்படுவதுடன், அன்பினை பரிமாறிக்கொள்ள ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களையும், ஏழை எளியோருக்கு உதவிகளையும் வழங்கி மகிழ்கின்றனர். அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கை இந்நாளில் மிளிர்வதை காண்கிறோம். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய கிறிஸ்துவ மக்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுக, திமுக அரசும் என்றைக்கும் தோளோடு தோள் சேர்ந்து துணை நின்றிருக்கிறது. அதேவழியில் தொடர்ந்து பயணித்து சிறுபான்மை மக்களின் உரிமைகளை நமது அரசு பாதுகாக்கும். மகிழ்ச்சி பொங்க கொண்டாடப்படும் இந்த விழாவை கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனிமனித இடைவெளியை கடைபிடித்து, பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டு, என் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Christmas ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...