வந்தவாசி, அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது: பொதுமக்கள் மண் மூட்டைகளை அடுக்கினர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வந்தவாசி, டிச.25: வந்தவாசி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியின் மதகு பழுதடைந்ததால் மண் மூட்டைகளை பொதுமக்கள் அடுக்கி வைத்தனர். வந்தவாசி அடுத்த தேசூரில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியின் மதகு அருகே ஓட்டை ஏற்பட்டதால் நீர் வெளியேறுவதை தடுக்க பொதுமக்கள் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். வந்தவாசி அடுத்த தேசூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் 3 மதகுகள் உள்ளன. இதில் ஒரு மதகு பழுதானதால் கடந்த ஆண்டு குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் ₹55 லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர்வாரி மதகு சீரமைக்கும் பணி நடந்தது. மேலும், ஏற்கனவே உள்ள ஒரு மதகில் கதவு ஏற்படுத்தும் பணி நடந்தது.

தொடர்ந்து சீரமைக்கப்பட்ட மதகு அருகே நேற்று திடீரென ஓட்டை ஏற்பட்டு ஏரியில் இருந்து நீர் வீணாக வெளியேறியது. இதையறிந்த பொதுமக்கள் உடனடியாக பெரணமல்லூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால், அதிகாரிகள் வருவதற்கு தாமதமானதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து ஓட்டை ஏற்பட்ட பகுதியில் கம்பு நட்டு மண் மூட்டைகளை அடுக்கினர். இருப்பினும், பழுதடைந்த மதகில் இருந்து நீர் வெளியேறிக்கொண்டு தான் இருக்கிறது.  மேலும், கடந்த ஆண்டு 55 லட்சம் மதிப்பீட்டில் கரையை பலப்படுத்தி, சீரமைக்கப்பட்ட மதகில் இருந்து தண்ணீர் வெளியேறுவது அப்பகுதி பொதுமக்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: