கடலூரில் அரசு பேருந்து மோதி கணவன் கண் எதிரே மனைவி பலி

கடலூர், டிச. 25: கடலூர் அருகே உள்ள உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி லலிதா(57). நேற்று பாலசுப்பிரமணியனின் பிறந்தநாள் என்பதால், இருவரும் நேற்று காலை கோயிலுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் அண்ணா பாலம் அருகே சென்றபோது, தேவனாம்பட்டினத்தில் இருந்து கடலூர் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்து இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பேருந்தின் பின்பக்க டயர் லலிதாவின் மீது ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலசுப்பிரமணியன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் வந்து, லலிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  கணவரின் பிறந்த நாளுக்காக, அவருடன் கோயிலுக்கு சென்றபோது பஸ் மோதி மனைவி அவர் கண் எதிரிலேயே உயிரிழந்த சம்பவம் உச்சிமேடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: