×

கோயில், பாலம் அமைப்பதில் பிரச்னை திருச்சுழி அருகே மறியல்

திருச்சுழி, டிச. 24: திருச்சுழி அருகே செங்குளம் கிராமத்தில் இரு தரப்பினரிடையே கோயில் அமைப்பது, பாலம் கட்டுவது தொடர்பான பிரச்னையில் மேலையூரில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சுழி அருகே செங்குளம் கிராமம் உள்ளது. இங்கு பல வருடங்களாக இரு தரப்பினரிடையே பொதுப் பாதை தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இக்கிராமத்தில் உள்ள பொதுப்பாதையில் ஒரு பிரிவினருக்கு மயானப்பாதைக்கு செல்லும் வழியாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் இறுதி சடங்கு செய்வதற்கு இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்லும் அவல நிலையும், பள்ளி செல்லும் குழந்தைகள் தண்ணீரில் நடந்து செல்லும் நிலைமையும் இருந்து வருகிறது.

இதற்கு ஒரு தரப்பை சேர்ந்த சமுதாயத்தினர் பாலம் கட்டுவதற்காக யூனியன் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள பொதுப்பாதையில் ஒரு சமுதாயத்தினர் கோயில் கட்டுவதாகவும், அதன் அருகே உள்ள பகுதியில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், செங்குளம் கிராமத்தில் உள்ள பொதுப்பாதையில் காங்கிரீட் அமைத்து கோயில் கட்டும் பணியினை தொடங்கியதால் மற்றொரு சமுதாயத்தினர் ஆத்திரமடைந்து பரளச்சி காவல்நிலையம் முன்பாகவும், சாயல்குடி செல்லும் மெயின் சாலையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், தாசில்தார் ரவிச்சந்திரன், திருச்சுழி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி, நாகமூர்த்தி அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாய ஜோஸ், திருச்சுழி காவல்துறை கண்காணிப்பாளர் மதியழகன் ஆகியோர் கிராம மக்களிடையே இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், கிராமமக்கள் கூறிய பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறிய பின்பு சாலைமறியல் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Stir ,Tiruchirappalli ,
× RELATED சுற்றுலா வாகனத்தை தாக்கிய காட்டு மாடு: கொடைக்கானலில் பரபரப்பு