×

விருதுநகர் சார்-பதிவாளர்அலுவலகம் முன் தர்ணா

விருதுநகர், டிச. 24: விருதுநகர் - மதுரை ரோட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் கடந்த இரு தினங்களாக 5 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட நிலங்களுக்கான பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலப்பத்திரங்களை பதிவு செய்து வாங்குவதற்கு பத்திரங்கள் உள்பட அனைத்து ஆவணங்கள், நில மதிப்பிற்கான கட்டணங்களை செலுத்திய நபர்கள் பத்திரங்களை பதிய முடியாமல் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் நேற்றும் பதிவிற்கு வந்தவர்களிடம் சார்-பதிவாளர் 5 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட நிலங்களை பதிய முடியாது என தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகம் முன்பாக நிலத்தரகர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்திரங்கள் பதிய முடியாமல் முற்றுகையிட்டு தர்ணா செய்தவர்கள் கூறுகையில், `` 5 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட இடங்களை பதிவு செய்ய நேற்று அப்ரூவல் வாங்கி வர வேண்டுமென தெரிவித்தனர். பதிவிற்கான பத்திரம் வாங்கி கட்டணம் செலுத்திய நிலையில் இன்றும் பதிய முடியாது என தெரிவித்தனர்.  இதனால் கடந்த இரு தினங்களாக விருதுநகரில் மட்டும் 150 பத்திரங்களை பதிய முடியாமல் அவதிப்படுகின்றனர். திடீர், திடீரென புதிய உத்தரவு வந்திருப்பதாக கூறி பதிய முடியாது என தெரிவிக்கின்றனர். அலுவலக நகல் கேட்டால் தரமறுக்கின்றனர். இதனால் அவசர தேவைக்கு விற்க நினைப்பவர்களால் இடங்களை விற்பனை செய்ய முடியவில்லை. எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கிறது என்று தெரிவித்தனர். சார் -பதிவாளர் அலுவலகம் முன்பாக முற்றுகை தொடர்ந்த நிலையில், அரசிடம் கேட்டு உரிய தகவல் தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Dharna ,Virudhunagar Char-Registrar's Office ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா