மகாகவி தாகூர் சிந்தனை பேரவை

தேவகோட்டை, டிச.24: தேவகோட்டையில் மகாகவி தாகூர் சிந்தனை பேரவையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஞானப்பிரகாசன் தலைமை வகித்தார். சிந்தனை பேரவை நெறியாளர் முனைவர் ஆறுமுகம் வரவேற்றார். செயலாளர் முனைவர் பழனி ராகுலதாசன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். ஆசிரியர் பிடலி ஸ்டான்லி எட்வின் பேசினார்.  தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரவை நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், பாரதியும் தாகூரும் ஒரே சிந்தனை கொண்ட சிறந்த கவிஞர்கள். இந்தியாவிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றுத்தந்த பெருமை தாகூருக்கு உண்டு. அவருடைய கீதாஞ்சலி உலகப்புகழ் பெற்ற நூலாகும். அவர் கல்வித் துறையில் ஆர்வம் காட்டி இயற்கையோடு ஒன்றிய கல்வியை வழங்க வேண்டும் என்று சாந்திநிகேதன் பல்கலைக் கழகத்தைத் தொடங்கினார். மகாகவி தாகூர் கருத்துக்களை நாம் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று உரையாற்றினார். சிந்தனை பேரவை செயலாளர் தெய்வசிகாமணி நன்றி கூறினார். முனைவர் குமரப்பன், கார்மேகம், பேராசிரியர்கள் டாக்டர் பாகை கண்ணதாசன், டாக்டர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: