×

புதிய தொழில் நுட்பங்களால் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறலாம் விதை பரிசோதனை அலுவலர் தகவல்

பரமக்குடி, டிச.24: ராமநாதபுரம் மாவட்டத்தில் கார்த்திகை பட்டத்தில் கமுதி,கடலாடி, பரமக்குடி,திருப்புல்லாணி,நயினார்கோவில்,ராமநாதபுரம் வட்டாரங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கடலை சாகுபடியில் தரமான விதைகளை உற்பத்தி செய்ய ஜிப்சம் இடுவது மிகவும் அவசியமாகும். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்து மற்றும் கந்தக சத்து அடங்கியுள்ளது. சுண்ணாம்புச் சத்து காய்கள் திரட்சியாகவும் அதிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது.கந்தக சத்து நிலக்கடலையில் எண்ணெய் அளவை அதிகரிக்கிறது. ஆகவே ஒரு எக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை விதைத்து 40-45ம் நாள் செடிகளின் ஓரமாக மண்ணை கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நிலக்கடலையின் விழுதுகள் அனைத்தும் கடலையாக மாறுவதுடன் நிலம் அதற்கு ஏற்றவாறு மாறுகிறது.

மேலும், நிலக்கடலையில் பருமன் அதிகமாக உள்ள ரகங்களின் காய்களில் பருப்பின் வளர்ச்சி குறைபாடு என்பது ஒரு பெரிய இடர்பாடாக உள்ளது. இதை தவிர்க்க ஏக்கருக்கு டி.ஏ.பி 1 கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம் மற்றும் போராக்ஸ் 200 கிராமினை 15 லிட்டர் தண்ணீரில் ஒன்றாக கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலை இந்தக் கலவையை வடி கட்டினால் 13 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும். இதனை 187 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 200 லிட்டர் அளவில் தயார் செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் பிளாநோபிக்ஸ் மருந்து 150 மில்லியை இதில் சேர்த்து விதைத்த 25 மற்றும் 35 நாட்களில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தொழில்நுட்பங்களை பின்பற்றினால் அதிக மகசூல் பெறலாம். விதைகளின் தரத்தினை பரிசோதனை செய்து சேமித்து வைப்பது நல்லது. பரிசோதனை செய்ய சுத்தமான பைகளில் நிலக்கடலைக் குவியலில் இருந்து 500 கிராம் காய்களை எடுத்து உரிய விபரங்களுடன் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள விதை பரிசோதனை நிலைத்தில் ரூ.30 கட்டணமாக செலுத்தி விதைப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று விதை பரிசோதனை அலுவலர் சிங்கார லீனா மற்றும் வேளாண்மை அலுவலர் முருகேஸ்வரி கேட்டுக்கொண்டனர்.

Tags : Seed Testing Officer ,
× RELATED விதை மாதிரிகளை பரிசோதனைக்குஅனுப்பி பயன்பெற அழைப்பு