×

பி.கொடிக்குளம் கூட்டுறவு சங்கத்தில் அலுவலர்களை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்6 கிராம மக்கள் பங்கேற்பு

பரமக்குடி, டிச.24:  பரமக்குடி அருகேயுள்ள பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முழுமையாக இயங்கக் கோரி 6 கிராம மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கார்மேகம் தலைமை தாங்கினார். ஜெயபால் முன்னிலை வகித்தார். தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. அதில் பரமக்குடி அருகே பி.கொடிக்குளம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிளியூர் கிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்தபோது 84 நபர்களின் பெயரில் கவரிங் நகைகளை வைத்து ரூபாய் ஒரு கோடியே 47 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் இளமதியான், கிளியூர் சங்க துணை செயலர் முருகேசன் ஆகிய இருவரையும் நவ.14ம் தேதி, மாவட்ட கூட்டுறவு துறை இணை செயலாளர் சஸ்பெண்ட் செய்தார். அதன் பிறகு மாற்று அதிகாரிகளை நியமிக்காமல் இருப்பதால் செயல்படாமல் நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு புதிதாக நகை கடன் பெற முடியவில்லை. ஏற்கனவே வைக்கப்பட்ட அடகு நகைகளை திருப்ப முடியாமல் தவித்து வருகின்றோம். இதனால் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் விலை கொடுத்து உரங்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டோம்.

எனவே பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.கொடிக்குளம், சிறுவயல், கிளியூர் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பி, வங்கியை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோஷமிட்டனர்.

Tags : P. Kodikulam Co-operative Society ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ