உரப்பனூர் கண்மாய் மடை உடைந்ததால் நெல் வயல்களில் புகுந்தது தண்ணீர் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

திருமங்கலம், டிச. 24: திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூர் கண்மாய் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிரம்பியது. தொடர்ந்து வைகையாற்றிலிருந்து தண்ணீர் வருவதால் கண்மாய் தண்ணீர் மற்ற கண்மாய்களுக்கு செல்கிறது.  இந்நிலையில் நேற்று காலை கண்மாயின் மூன்றாம் மடை பகுதியில் தண்ணீர் திறக்க முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மடையின் ஷெட்டர் பகுதியில் உடைப்பு ஏற்படவே கண்மாய் தண்ணீர் அருகேயுள்ள நெல் வயல்களில் பாய்ந்தது. மடையில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய விவசாயிகள், பொதுமக்கள் முயன்றனர்.

ஆனால் தண்ணீரின் வேகம் அதிகளவில் இருந்ததால் அவர்களால் சரிசெய்ய முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் ஆர்டிஓ அனிதா உடனடியாக உடைந்த மடை பகுதியை சரிசெய்ய உத்தரவிட்டார். இதையடுத்து உரப்பனூர் ஊராட்சி தலைவர் யசோதை, விஏஓ ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்டனர். தொடர்ந்து மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பு சரிசெய்யப்பட்டது. இருப்பினும் கண்மாய் தண்ணீர் நெல் வயல்களில் பாய்ந்ததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: