மழை ஓய்ந்ததையடுத்து அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகரிப்பு

கரூர், டிச. 24: கரூர் மாவட்டம் முழுதும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இயல்பை காட்டிலும் அதிகளவு பெய்தது. கரூர் மாவட்டத்திலும் ஆண்டு சராசரியை விட இந்த சீசனில் அதிகளவு மழை பெய்தது. தற்போது மழை ஒய்ந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அதிகாலை நேரத்தில் மாவட்டம் முழுதும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரூர் நகரைச் சுற்றிலும் முக்கிய நகரங்களுக்கான பைபாஸ் சாலை செல்கிறது. இந்த பைபாஸ் சாலைகளில், காலை நேரங்களில் பனிப்பொழிவின் தாக்கம் காரணமாக சாலைகள் கண்ணுக்கு தெரியாத நிலையில், அனைத்து வாகனங்களும் காலை நேரத்திலும் வாகன வெளிச்ச உதவியுடன்தான் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அதிக பனிப்பொழிவு காரணமாக முதியவர்களும், சிறுவர், சிறுமிகளும் குளிர் தாங்க முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: