×

கத்திக்கு கத்தி; ரத்தத்துக்கு ரத்தம் என்பதுபோல் கைதுக்கு கைது தந்திரம் காரியத்தை சாதித்த சீனா: அமெரிக்காவிடம் இருந்து பெண் நிர்வாகியை மீட்டது

நியூயார்க், செப். 26: ஹூவாய் பெண் நிர்வாகி மீதான வழக்கை ரத்து செய்வதாக ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உளவாளிகள் என கைதான கனடா நாட்டினரை சீனா விடுவித்துள்ளது. தனது ‘பிணை அரசியல்’ மூலம் சீனா காரியம் சாதித்துள்ளது. சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாயின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள், மெங் வாங்க்ஜோ கனடா நாட்டில் உள்ள வான்கூவர் நகரில் கடந்த 2018ல் கைது செய்யப்பட்டார். அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள வடகொரியா, ஈரான் நாடுகளுடன் மெங் வாங்க்ஜோவின் நிறுவனம் தொழில் ஒப்பந்தம் செய்தது. இதனால், தடையை மீறியதற்காக  அமெரிக்கா கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து கனடா அரசு கைது செய்தது. இந்த விவகாரம் அமெரிக்கா, சீனா இடையேயான மோதலை அதிகரித்தது. ஹூவாய் நிர்வாகி கைதான உடனேயே, சீனாவில் உளவு பார்த்ததாக அந்நாட்டு அரசு 2 கனடா நாட்டினரை கைது செய்தது. இது, சீனாவின் மிரட்டும் செயல் என கடுமையாக குற்றம்சாட்டப்பட்டது. கனடா நாட்டினரை சீனா விடுவிக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண, அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஜின்பிங் இடையே ஒப்பந்தம் முடிவானது. இதன்படி, ஓராண்டுக்குள் வாங்க்ஜோவ் மீதான மோசடி வழக்கு நீக்கப்படும் என்றும்,  அவர் விடுவிக்கப்பட்டதும், கைதான கனடா நாட்டினரையும் சீனா விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதன்படி, நேற்று முன்தினம் வாங்க்ஜோவ் விடுவிக்கப்பட்டு சீனாவுக்கு விமானத்தில் புறப்பட்டதும், சீனா சிறையில் இருந்து 2 கனடா நாட்டினரும் விடுவிக்கப்பட்டதாக கனடா பிரதமர் டிருடேவ் அறிவித்தார். வாங்க்ஜோவ் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அவர் மீதான வழக்கு அடுத்த ஆண்டு நீக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. கத்திக்கு கத்தி, ரத்தத்துக்கு ரத்தம் என்ற பழமொழி உள்ளது. அதுபோல், கைதுக்கு கைது தந்திரம் மூலம் தனது நாட்டு பெண்ணை சீனா மீட்டுள்ளது….

The post கத்திக்கு கத்தி; ரத்தத்துக்கு ரத்தம் என்பதுபோல் கைதுக்கு கைது தந்திரம் காரியத்தை சாதித்த சீனா: அமெரிக்காவிடம் இருந்து பெண் நிர்வாகியை மீட்டது appeared first on Dinakaran.

Tags : China ,United States ,New York ,Huawei ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் நடந்து வரும்...