×

சோழவந்தானில் பராமரிப்பில்லாத பாசன கால்வாய் வீணாக நீர் வெளியேறுவதால் வேதனை

சோழவந்தான், டிச. 23: சோழவந்தான் மற்றும் சுற்றுப்பகுதி கிராம விவசாயிகளின் பாசன வசதிக்காக முல்லை பெரியாறு பிரதான கால்வாயில், நரிமேடு பகுதியிலிருந்து பிரிவு கால்வாய் செல்கிறது. இதன்மூலம் நாச்சிகுளம், சோழவந்தான், பசும்பொன் நகர், ஆலங்கொட்டாரம் பகுதிகளின் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் இதே கால்வாய் நீர் திருமால் நத்தம்,நெடுங்குளம்,தேனூர் கன்மாய்களிலும் நிரப்பப்பட்டு அப்பகுதி விவசாய நிலங்களுக்கும் பாசன வசதி கிடைக்கிறது. இதன்படி சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 20 கிமீ தூரமுள்ள இக்கால்வாய் பராமரிப்பின்றி பல இடங்களில் இடிந்து சேதமாகி கிடப்பதுடன், புதர்மண்டியும் கிடக்கிறது. இதனால் நீர் வீணாகி வயல்வெளியில் பாய்வதால், கடைமடை பகுதிகளுக்கு நீர் செல்வது தடைபடுகிறது.

இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘இக்கால்வாயின் இடைப்பட்ட சில பகுதிகளை மட்டும் 2 ஆண்டுகளுக்கு முன் இடித்து புதிதாக கட்டியுள்ளனர். மீதி இடங்கள் பராமரிப்பின்றி சேதமானதுடன், அதிகளவு முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கடைமடை பாசன பகுதிக்கு உரிய நீர் செல்லாமல் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து பொதுப்பணி துறையினரிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இக்கால்வாயில் சேதமடைந்த பகுதியில் புதிதாக கால்வாய் அமைத்து தருவதுடன், முட்செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Cholavandan ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை