தமிழகத்தில் விரைவில் ஒமிக்ரான் பரிசோதனை வசதி சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி வேலூரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி

வேலூர், டிச.23: மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை வசதி செய்யப்படும் என்று வேலூரில் கொரோனா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். டிஆர்ஓ ராமமூர்த்தி, எம்எல்ஏ கார்த்திகேயன், ஆர்டிஓ விஷ்ணுபிரியா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாநகர் நல அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்ததுடன், பஸ்களில் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக நடத்த உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை 85 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2வது தவணை தடுப்பூசி 55.22 சதவீதம் போடப்பட்டுள்ளது. சவாலான மாவட்டங்களான ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் தவணை 67 சதவீதமும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 70.4 சதவீதமும், 2ம் தவணை தடுப்பூசி முறையே 39.4 சதவீதமும், 40.17 சதவீதமும் போடப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிரமணியன் மற்றும் எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் முதல் தவணை 85.25 சதவீதமும், 2ம் தவணை தடுப்பூசி 50 சதவீதத்தையும் எட்டியுள்ளது. தற்போது இங்கு பலரும் முகக்கவசம் இல்லாமல் உள்ளதை பார்க்க முடிந்தது. இதை தவிர்க்க விழிப்புணர்வு மட்டுமின்றி பழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் இருப்போர், தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் எஸ்ஜின் கண்டறியப்பட்டால் ‘பிராக்ஸி இன்டிகேட்டர்’ என்று சொல்வோம். ஒமிக்ரான் என்று சொல்லும்போது 48 ேபருக்கு எஸ்ஜின் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதுவரை 13 பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. அதில் 8 டெல்டா வகையும், 1 ஒமிக்ரான் வகையும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 4 பரிசோதனை முடிவுகளை மீண்டும் பரிசோதனைக்கு கொடுத்துள்ளனர். மீதம் நிலுவையில் உள்ளது.

அதிகம் பாதிப்புள்ளவை என 8 நாடுகளும், 11 பாதிப்பில்லாத நாடுகளாகவும் என மொத்தம் 19 நாடுகளில் இருந்து வந்த 39 பேருக்கு கொரோனா பாசிடிவ் வந்துள்ளது. அதன் பிறகு மரபியல் சோதனை நடத்துவோம். 8ம் நாள் டெஸ்ட் செய்தபோது 44 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வரை 104 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில் 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மற்ற 82 பேரில் 72 பேர் கிங் மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒமிக்ரான் என்பது மரபணு மாற்றப்பட்ட கொரோனா இனம். ஏற்கனவே டெல்டா தாக்கம் இந்தியா முழுதும் இருக்கும் நிலையில் ஒமிக்ரான் வந்துள்ளது. 98க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. மத்திய அரசு வல்லுனர்கள் கருத்துப்படி 3 மடங்கு வேகமாக பரவக்கூடிய வகை. 10 நாள் முடிந்த பிறகும் ஒமிக்ரான் பாதித்த முதல் நபர் நன்றாக இருக்கிறார். மற்றவர்களும் நன்றாக இருக்கிறார்கள். ஆகவே பதற்றமடைய வேண்டியதில்லை. கட்டுப்பாடுகளை பொறுத்தவரை 10 விழுக்காடு நோய் பாதிப்பு இருந்தாலோ, படுக்கை வசதி 100 படுக்கைகளில் 40 படுக்கைகள் நிறைந்தாலோ அப்பகுதியில் கட்டுப்பாடு விதிகளை கடைபிடிக்க மத்திய அரசு கூறியுள்ளது. ஒமிக்ரான் பரிசோதனை வசதியை பொறுத்தவரை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஆய்வக வசதி உள்ளது. ஆனால் அங்கு பரிசோதனைக்கு எடுக்கப்படும் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மத்திய அரசிடம் பரிசோதனை வசதிக்கு அனுமதி கேட்டுள்ளோம். அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை வசதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: