பொதுப்பணித்துறை மூலம் மீன்பிடி உரிமம் வழங்க வழக்கு

மதுரை, டிச. 23: பொதுப்பணித்துறை மூலம் மீன்பிடி உரிமம் வழங்கக் கோருவது குறித்து புதுக்கோட்டை கலெக்டர் பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆளவந்தான் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசாணைப்படி கண்மாய்களில் மீன் பிடிப்பதற்கான ஏலத்தை பொதுப்பணித்துறையே மேற்கொள்ள வேண்டும். ஆனால், அறந்தாங்கி பகுதியில் சில ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு குறைந்த தொகைக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நிபந்தனைகளை பின்பற்றுவதில்லை. ரசாயனம் கலந்த தீவனங்களை மீன்களுக்கு கொடுக்கின்றனர். இதனால் நீரின் தூய்மை பாதிக்கிறது. இந்த தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. மீன்கள் வளர்ப்பதற்காக நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுகின்றனர். இதனால், விவசாயத்திற்கு செயற்கை வறட்சி ஏற்படுகிறது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 5,062 கண்மாய்களில் மீன்பிடி உரிமத்தை பொதுப்பணித்துறை மூலம் நடத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. கண்மாய்களில் மீன்பிடி உரிமம் வழங்குவது தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட அரசாணை புதிதாக வெளியிடப்பட்டுள்ளது என கூறப்பட்டது. இதையடுத்து மனுதாரர் கோரிக்கை தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டர் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Related Stories: