நாமக்கல், டிச.22: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பால விநாயகம் கோரிக்கைகள் குறித்து பேசினார். வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும், கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும், கிராம ஊராட்சி செயலர்களுக்கு வழங்க உரிய அரசாணை வெளியிட வேண்டும். முழு சுகாதார திட்ட வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வளர்ச்சி துறையில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் லோகமணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.