×

கூடலூர் அருகே பளியன்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச ஆடுகளை திருப்பி அனுப்பிய வனத்துறை சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு

கூடலூர், டிச. 22: கூடலூர் அருகே, பளியன்குடி மக்களுக்கு அரசு வழங்கிய விலையில்லா ஆடுகளை, புலிகள் காப்பக இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என கூறி வனத்துறை திருப்பி அனுப்பினர். இதற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து பளியன்குடி பொதுமக்கள் லோயர்கேம்ப் சாலையில் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், லோயர்கேம்ப் அருகே கண்ணகி கோயிலுக்கு செல்லும் மலையடிவாரத்தில் பளியன்குடி உள்ளது. இங்கு பழங்குடி மக்கள் சுமார் 60 குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் மூலம் பளியன்குடி பகுதி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 162 ஆடுகளை நேற்று முன்தினம் இரவு கொண்டு வந்தனர். அரசுத்துறை அதிகாரிகள் தலைமையில் பொதுமக்களளுக்கு ஆடுகள் வழங்குவதற்காக, வேளாண்மை துறை சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் இருந்த வனத்துறையினர், புலிகள் காப்பகம் என்பதால் காப்பக இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்றனர். இதையடுத்து ஆடுகளை வேளாண்மை துறையினர் திரும்பிக் கொண்டு சென்றனர். இந்நிலையில், ஆடுகள் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பளியன்குடி சமூக தலைவர் மனோகரன் தலைமையில் 100க்கும் மேலான பொதுமக்கள் சாலை மறியல் செய்ய லோயர்கேம்ப் சென்றனர். அவர்களை குமுளி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜூனன், கம்பம் இன்ஸ்பெக்டர் லாவண்யா, கம்பம் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு சம்பவ இடத்திற்கு வந்து பளியன்குடி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பளியன்குடி பொதுமக்கள், ‘அரசு வழங்கும் சலுகைகளுக்கு வனத்துறை முட்டுக்கட்டை போடாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர். இதையடுத்து 10 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Forest Department ,Paliyankudi ,Kudalur ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...