×

பெரியகுளத்தில் இடியும் நிலையில் நகராட்சி வணிக வளாகம் புதிதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை

தேனி, டிச. 22: பெரியகுளத்தில் இடியும் நிலையில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் அல்லது சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பெரியகுளத்தில் புதிய பஸ்நிலைய திருப்பத்தில் இருந்து, மதுரை சாலையின் இடது புறம் நகராட்சி இடத்தில் கடந்த 2001ல் ரூ.21 லட்சத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் கீழ்தளம் மற்றும் முதல்தளத்தில் 10 கடைகள் உள்ளன. நகராட்சி விதிகளின்படி டெண்டர் மூலம் வணிகர்கள் வாடகைக்கு இருந்து வருகின்றனர். இந்த கட்டிட வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகாலமாக உரிய பராமரிப்பின்றி உள்ளது.

இந்நிலையில், கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள கான்கிரீட் முழுமையாக பெயர்ந்துள்ளது. கட்டிடத்தில் சிமெண்ட் சாந்தில்லாமல் செங்கல் மட்டும் தெரிகிறது. கான்கிரீட் பில்லர்களில் கம்பிகள் மட்டுமே காட்சி பொருளாக உள்ளன. எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழுந்து விடும் ஆபத்தான நிலையில் உள்ளது. இக்கட்டிடத்திற்கு முன்பாக பெரியகுளத்தில் நடக்கும் பெரும்பாலான பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இப்பகுதியில் இக்கட்டிடம் திடீரென விழுந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன்பாக, இந்த கட்டிடத்தை இடிக்கவோ அல்லது கட்டிடத்தை சீரமைக்கவோ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Periyakulam ,
× RELATED மகாசிவராத்திரியை முன்னிட்டு...