திருமண வயதை உயர்த்தியது பெண்களுக்கான அநீதியாகும் எம்எல்ஏ ஜவாஹிருல்லா எதிர்ப்பு

பரமக்குடி, டிச.22:  திருமண வயதை உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவு, பெண்களுக்கான அநீதியாகும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இணையும் விழா மற்றும் ஜமாத் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 55 மீனவர்களையும், 12 படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியதை வன்மையாக கண்டிக்கிறேன். நீண்ட நெடிய காலம் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை தொடர்பான இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைக்க கூடிய மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது. ஆதார் அட்டையை எல்லா வகையிலும் பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. அந்த தீர்ப்புக்கு எதிராக இந்த மசோதா தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தி ஒன்றிய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் மசோதா நிறைவேற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. 1978ம் ஆண்டு பெண்களுக்கான திருமண வயது 16லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் குழந்தை திருமணங்களை தடுக்க முடியும் என கூறப்பட்டது. இந்தியாவில் 23 சதவிகிதம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்நிலையில் பெண்கள் 18 வயதில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும், 18 வயதில் சொந்தமாக சொத்துக்களை வாங்க முடியும். இந்நிலையில் பெண்கள் தங்களது கணவரை தேர்ந்தெடுக்கும் வயது 21 ஆக அறிவித்திருப்பது பெண்களுக்கான அநீதியாகும்.

திருமண வயதை 21 ஆக உயர்த்தியுள்ளதால் சிசு உயிரிழப்புகளை தடுக்க முடியும். பிரசவத்தின் போது இளம்பெண்கள் உயிரிழப்பை தடுக்க முடியும் என ஒன்றிய அரசு கூறும் காரணங்கள் ஏற்கக் கூடியதாக இல்லை. இளம் பெண்களுக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பதிலாக, அந்த கடமையில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஒன்றிய அரசு பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களின் திருமண வயதை உயர்த்திய மசோதாவை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பாஜகவின் கிளை கட்சியாக அதிமுக மாறிவிட்ட நிலையில் அதிமுகவிலிருந்து முஸ்லிம் நிர்வாகிகள் நீக்கப்படுவது அதிர்ச்சிகரமானது இல்லை. வழக்கமானது தான்’’ என்றார்.

Related Stories: